History Of Film Part 7 பாலு மகேந்திரா தனக்கான ஒரு சிம்மாசனத்தில் வெற்றிகரமாக அமர்ந்திருந்த நேரம். ஆம் இக்காலகட்டங்களில் பாரதிராஜா, மகேந்திரன், துரை, பாலு மகேந்திரா போன்றோர் இயக்குனர்களாக தமிழ்த் திரைப்படத் துறையில் நுழைந்தவுடன் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டது.
இன்றுவரை 16 வயதினிலே படத்தையோ, முள்ளும் மலரும், உதிரிபூக்கள் படங்களையோ, மூன்றாம் பிறை படத்தையோ மறக்காத ரசிகர்களே இல்லையென சொல்லலாம்.
கோலங்கள், மூடுபனி, வீடு,போன்ற படங்கள் வெளியானபோது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஒரு தலை ராகம் (1980) மூலம் திரைப்பட உலகிற்குள் அடியெடுத்து வைத்த டி.ராஜேந்தர், மக்களிடையே வரவேற்பு பெரும் படங்களை இயக்கி வந்தார். கதை வசனம், ஒளிப்பதிவு, இசை ஆகிய சகல பணிகளையும் தானே செய்து புகழ் வாங்கிய ஒருவர்.
இவரது தனித்துவம் ஆடம்பர திரையமைப்பு, அடுக்கு மொழி வசனங்கள் இவையே.
எண்பதுகளின் ஆரம்ப வருடங்களில் தமிழ்ப் பட தயாரிப்பு முன் காணாத அளவு அதிகரித்தது. தயாரிப்பாளர்கள் சற்று அதிகமாகவே வர தொடங்கினர்.
இந்த இடத்தில் மசாலா பாணியில் கதை, திரைக்கதை எழுத்தாளர் பஞ்சு அருணாச்சலம் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். அன்று பெரிய நாயகர்கள் வளர இவரும் ஒரு காரணம்
இவரை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை ஒரு தனி பதிவில் காணலாம்.
1985 ஆம் ஆண்டு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் 129 படங்கள் வெளியாயின. இந்தியாவில் வர்த்தகரீதியில் இந்தி திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருப்பது தமிழ் திரைப்படங்கள்தான்.
கோமல் சுவாமிநாதனின் நாடகம் தண்ணீர் தண்ணீர் 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது. இதுபோன்றதுதான் இவரது அச்சமில்லை அச்சமில்லை படமும் அரசியல் அங்கதம் நிறைந்த படம்.
சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய ராஜபார்வையும் அதே ஆண்டுதான் வெளிவந்தது. நட்சத்திர ஆளுமையில் கமலஹாசன் புகழ் ஓங்கியதும் இந்த ஆண்டுகளில்தான். அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்ற ருத்தரையாவின் அவள் அப்படிதான் (1980) இந்த ஆண்டுகளில் வந்த ஒரு முக்கியமான படைப்பு.
பெண்ணிய சித்தாந்தத்தை, சீரிய திரைப்படப் பண்பு நிறைந்த ஒரு படத்தின் மூலம் தமிழர்களுக்கு தந்தார் இவர்.
எண்பதுகளில் மற்றுமொரு முக்கிய படைப்பாளியான மணிரத்னம், பல்லவி அனுபல்லவியுடன் திரையுலகில் பிரவேசித்தார். தமிழ்த்திரையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய அவரது மௌன ராகம் (1986) சிறந்த தமிழ்படத்திற்கான விருதைப் பெற்றது.
தேசிய அளவில் புகழ் ஈட்டியது 1987 இல் வந்த இவரின் நாயகன், ரோஜா (திரைப்படம்), பம்பாய் ஆகிய படங்கள் இவருக்கு அகில இந்திய அளவில் புகழீட்டி தந்தது.
1990 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனமான ஜி.வெங்கடேஸ்வரன் “ஜி.வி.பிலிம்ஸ்” என்ற நிறுவனத்தை ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
1990 ஆம் ஆண்டு கே.எஸ் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் இந்தியாவின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இவ்வாண்டில் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய புதிய இயக்குநர்கள் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
விக்கிரமனின் புது வசந்தம், ரவிக்குமாரின் புரியாத புதிர் போன்ற படங்கள் வெளிவந்தன.
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அந்த நாள் படத்திற்கு பிறகு கிளைமாக்ஸ் யாரிடமும் சொல்ல வேணாம் என கார்டு போட்ட படம் இதுவும் ஒன்று. Rashomon effect என சொல்லும் இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவில் சற்று குறைவுதான்.
இயக்குனர் Akira Kurosawa (அகிரா குரோசாவா) எடுத்த Rashomon என்ற திரைப்படம் மூலம்தான் இந்த பெயர் வந்தது.
தொடர்ந்த வருடங்களில், கிராமப்புறக் கதைகளைக் கொண்ட சின்ன கவுண்டர் (1992) உள்ளிட்ட பல வெற்றி படங்கள் வர, பல தயாரிப்பாளர்கள் கிராமப்படங்களை தயாரிக்க விருப்பமும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டுகளில் வந்த ஜெயபாரதி இயக்கிய உச்சி வெய்யில் (1990) இந்த கலாச்சார சூழலிலும் சீரிய திரைப்படம் மலர முடியும் என்பதை நிரூபித்தது.
இது கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும், கனடா நாட்டில் ரொறன்ரோவில் நடந்த திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விமர்சன ரீதியில் புகழ்பெற்றது.
ரோஜா (1992) காஷ்மீர் தீவிரவாதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை. இதைத் தொடர்ந்து இந்து-முஸ்லீம் உறவு பற்றிய கதையைக் கொண்ட பம்பாய் (1995) பல தடைகளையும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டாலும், வெற்றிபடமாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
AR.ரஹ்மான் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடங்கிய வருடங்கள் ரோஜாவில் இருந்து ஆரம்பித்தது.
History of Film Part 7 – 1996 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறைக்கு ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது.தமிழ்த் திரைப்படங்கள் பல விருதுகளைப் பெற்றன.சிவாஜி கணேசனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், அகத்தியனுக்கு சிறந்த இயக்குநர் விருதும்,
சிறந்த நடிகராக கமல்ஹாசனுக்கு வெள்ளித் தாமரை விருதும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதும், சித்ராவிற்கு சிறந்த பின்னணி பாடகி விருதும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்திற்கான விருது காதல் கோட்டைக்கும் கிடைத்தது.
திரைப்படம் குறித்த சிறந்த நூல் எழுதியமைக்காக தியடோர் பாஸ்கரனுக்கு தங்கத் தாமரை விருது போன்ற பல்வேறு விருதுகளைத் தமிழ்த் திரை 1996 ஆம் ஆண்டில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற மெல்லிய கதைகளம் கொண்ட படங்களை இயக்கிய அகத்தியன் பின்னாட்களில் காணாமல் போனது தனி கதை.!
இதற்க்கு பின் தமிழ்சினிமாவில் நடந்தது அனைத்தும் பிரம்மிக்க தக்கவை.! அவைகளை பற்றி இந்த பகுதியின் முந்தைய பகுதியான தமிழ் சினிமா வரலாறு Season ல் 10 Episode களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும். இந்த பகுதியின் முந்தைய Episode களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவுடன் History of Film Season 2 முடிவடைகிறது. விரைவில் வேறு களத்தில் சந்திப்போம்.