திரைப்பட திரையில் பேரழிவு படங்கள் | Silver Screen Disaster | Disaster Movies | Tanglish

திரைப்பட திரையில் பேரழிவு படங்கள் | Silver Screen Disaster

 

இயற்கைப் பேரிடர்களைக் குறித்த படங்கள் ஏராளமாக உண்டு. குறிப்பாக ஹாலிவுட்டில், இத்தகைய பேரிடர்களை நம்பியே பிழைப்பு நடத்தும் சில இயக்குநர்களில் ரோலாண்ட் எம்மரிச் முதன்மையானவர். வெள்ளை மாளிகையை ஏலியன்கள் வந்து தகர்ப்பதாக 1996ல் இண்டிபெண்டன்ஸ் டே படத்தை எழுதி இயக்கியவர் இவர். இண்டிபெண்டன்ஸ் டே படத்துக்கு முன்னரே யூனிவர்சல் சோல்ஜர் போன்ற சில ஆக்‌ஷன் படங்கள் எடுத்திருந்தாலும், இந்தப் படம் அடைந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் வரிசையாகப் பேரிடர்களை மையமாக வைத்துப் படங்கள் எடுக்கத் துவங்கினார்.

ராட்சத ஜந்துவான காட்ஸில்லா அமெரிக்காவில் நாசம் விளைவிப்பதாக ‘காட்ஸில்லா’ திரைப்படம் 1998ல் வெளியானது. அதன்பின் டே ஆஃப்டர் டுமாரோ, 2012 ஆகிய இரண்டு பேரிடர் திரைப்படங்கள் எடுத்தார். இந்தப் பாணியில் இருந்து விலகித் திடீரென்று ஷேக்ஸ்பியர் ஒரு போலி என்று சொல்லக்கூடிய அனானிமஸ் திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார்.

அதன்பின் வழக்கமான வெள்ளை மாளிகை தகர்ப்பு – வைட் ஹௌஸ் டௌன் படத்தில். இதன்பின் ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை இயக்கிவிட்டு (ஸ்டோன்வால்), இப்போது இண்டிபெண்டன்ஸ் டே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இயற்கைப் பேரிடர்களைப் பற்றிய படங்கள் ஏன் உலகம் முழுக்க ஓடுகின்றன என்று யோசித்தால், மக்களுக்கு எப்போதும் இத்தகைய பேரிடர்களின் மீது ஒருவித பயம் இருந்தே வந்துள்ளது என்பது புரிகிறது. என்னதான் நாகரிகத்தில் மனிதன் வளர்ந்தாலும், திடீரென்று விஸ்வரூபம் எடுக்கும் இயற்கைக்கு முன்னால் மனிதனுக்கு எந்தப் போக்கிடமும் இல்லை என்பது பல்வேறு இயற்கைப் பேரிடர்களைக் கவனித்தால் நன்றாகத் தெரிகிறது.

ஒருவகையில் மனிதகுலத்தின் இரக்கமற்ற முன்னேற்றமுமே இந்தப் பேரிடர்களில் பலவற்றை உருவாக்கியும் உள்ளன. இது மனிதனுக்கும் தெரியும் என்பதால், இயற்கைப் பேரிடர்களைப் பார்த்து மனிதன் பயப்படவே செய்கிறான். இதுவரை வந்துள்ள ஏராளமான பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், சுனாமிகள், புயல்கள், சூரைக்காற்றுகள், பெருமழைகள், பனிப்பொழிவுகள், வெள்ளங்கள் போன்ற அத்தனை இயற்கைப் பேரிடர்களுமே பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளன. இதனாலேயே மனிதனுக்கு இவைகளின்மீது அச்சம் இருந்தே வந்துள்ளது.

இவைகளில் பெரும்பாலான பேரிடர்கள் நமக்கும் பழக்கம்தான். பனிப்பொழிவு, எரிமலை வெடிப்பு போன்றவை இந்தியாவில் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும், ஜப்பான் போன்ற இடங்களிலும்தான் அவை சகஜம். இருப்பினும், அவைகளைப் பற்றிய செய்திகளை நாம் படித்துக்கொண்டே இருக்கிறோம். உதாரணமாக, க்ரகடா தீவில் (இந்தோனேஷியா) இதுவரை பல்வேறு முறைகள் எரிமலை வெடிப்பினால் ஆயிரக்கணக்கான உயிர்கள் சேதமாகியுள்ளன. 1883ல் க்ரகடாவில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பினால் அந்தத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு அழிந்தது. அங்கே இருந்து மூவாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த ஆஸ்த்ரேலியாவில்கூட இந்தப் பெருவெடிப்பு உணரப்பட்டது. இதனால் சுனாமிகளும் உருவாயின. முப்பத்தைந்தாயிரம் உயிர்கள் பறிபோயின. உலகில் நிகழ்ந்த மிகப்பெரிய இயற்கைப் பேரிடர்களில் இதுவும் ஒன்று.

இத்தகைய எரிமலை வெடிப்பைப் பற்றி வல்கேனோ மற்றும் தாந்தே’ஸ் பீக் ஆகிய இரண்டு படங்கள் 1997ல் வெளிவந்துள்ளன. இரண்டுமே ஒரே போன்ற கதைகள். ஹாலிவுட்டில் இதுபோல் ஒரே சப்ஜெக்டில் அமைந்த படங்கள் சகஜம். க்ரகடா வெடிப்பைப் பற்றியே 1969ல் அதே பெயரில் ஒரு படம் வந்துள்ளது. பண்டைய காலத்தில், வெஸூவியஸ் என்ற எரிமலை, பாம்பேய் (Pompeii) என்ற ரோம சாம்ராஜ்யத்தின் நகரை முற்றிலுமாக அழித்த கதை, அதே பெயரில் 2014ல் படமாக வந்துள்ளது. இவைகளைப் போல, Joe Vs the Volcano, Stromboli (இடாலியன் படம் – ராபர்டோ ரோஸலீனி இயக்கியது), St. Helens, When Time Ran out போன்ற இன்னும் சில படங்கள் உண்டு.

விண்வெளியில் இருந்து மாபெரும் விண்கற்கள் பூமியில் விழுந்து, அதனால் பூமியே அழிந்துவிட்டால்? இந்தக் கதையும் திரைப்படங்களாக வந்துவிட்டது. 1998ல், டீப் இம்பாக்ட் மற்றும் ஆர்மகெட்டன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாயின. இரண்டிலும் ஒரே கதைதான் – பூமியை அழிக்கப்போகும் மாபெரும் விண்கற்களை எப்படி அழிப்பது? இரண்டில் ஆர்மகெட்டன் உலகெங்கும் பிரமாதமாக ஓடியது.

தமிழகத்தில் கூட இப்படம் வெற்றிகரமாக ஓடியதை நண்பர்கள் அறிந்திருக்கலாம். டீப் இம்பாக்ட்டும் வசூலைக் குவித்தாலும், இன்றுவரை ஆர்மகெடனே நினைவுகூரப்படுகிறது. காரணம் அதில் நடித்திருந்த ப்ரூஸ் வில்லிஸ் போன்ற பிரபல நடிகர்கள். இவைகளைத் தவிர, Asteroid, Meteor, Melancholia (டென்மார்க் படம்) போன்ற படங்கள் உண்டு.

பூகம்பங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், எக்கச்சக்கமான படங்களைக் குறிப்பிடலாம். மிகச்சமீபத்தில், சான் ஆண்ட்ரியாஸ் என்ற பெயரில் ட்வேய்ன் ஜான்ஸன் (The Rock) நடித்த படம் வெளியாகியது. வசூலிலும் பெருவெற்றி பெற்றது. இதைத்தவிர, 1936இலேயே வெளிவந்த San Fransisco, 1974ன் Earthquake, 1993ன் Shortcuts, Aftershock: Earchquake in Newyork என்ற தொலைக்காட்சி சீரீஸ் ஆகியவை பூகம்பங்களைப் பற்றிய குறிப்பிடத்தகுந்த படங்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சூறாவளிகள் அங்கே அடிக்கடி நேரும். இவைகளின்மூலம் பலத்த சேதமும் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் புதிய புதிய சூறாவளிகள் கிளம்பும். அப்படிச் சூறாவளிகளைப் பற்றி வெளிவந்த படங்களில் Twister குறிப்பிடத்தக்கது. சூறாவளியை ஆராயச்செல்லும் விஞ்ஞானிகளைப் பற்றியது. The Perfect Storm படத்தைத் திரைரசிகர்கள் மறந்திருக்கமுடியாது. நிஜத்தில் நிகழ்ந்த 1991ம் ஆண்டின் புயல்காற்றைப் பற்றியது. Night of the Twisters, In to the Storm, White Squall, Slattery’s Hurricane (1949) என்று புயல்களையும் சூறாவளிகளையும் பற்றிய படங்கள் பல உண்டு.

சென்னையில் 2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியை யாரும் மறந்திருக்கமுடியாது. சென்னை மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலில் இந்தோனேஷியா, இலங்கை மற்றும் தாய்லாந்தை பாதித்த பேரிடர். இந்த சுனாமியைப் பற்றியே The Impossible என்ற படம் 2012ல் வெளியானது.

தாய்லாந்துக்கு 2012 கிறிஸ்துமஸுக்கு விடுமுறையில் செல்லும் ஒரு குடும்பம் சுனாமியால் அலைக்கழிக்கப்படுவதைச் சொன்ன படம். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் 2010ல் எடுத்த Hereafter படத்தில், இந்த 2004 சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மேரி என்ற கதாபாத்திரம் வருகிறது. 2011ஆம் ஆண்டில் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியைப் பற்றிய ஒரு ஆவணப்படம் உண்டு.

அதன் பெயர் The Tsunami and the Cherry Blossom. சுனாமிக்குப் பிந்தைய ஜப்பானில் வரக்கூடிய செர்ரி ப்ளாஸம் பூக்கும் காலகட்டத்தை அவர்கள் எதிர்கொண்டு சுனாமியில் இருஇந்து மீள்வதை சொல்லும் படம் இது. ஜப்பானில் சுனாமிகள் அதிகம். அந்த வார்த்தையே ஒரு ஜப்பானிய வார்த்தை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதன் அர்த்தம்: ‘துறைமுக அலை’ என்பதாகும். இண்டர்ஸ்டெல்லார் படத்திலும் சுனாமியை ஒத்த பிரம்மாண்டமான அலை வரும் காட்சி ஒன்று உள்ளது. 1972ல் வெளியான மிகப்பிரபலமான படம், The Poseidon Adventure. இதில் 90 அடி உயர பிரம்மாண்ட சுனாமி வருகிறது. அந்தப் படத்தின் ரீமேக்கான Poseidon (2006) படத்தில், அதைவிடப் பிரம்மாண்டமான 150 ஐ உயர சுனாமி காட்டப்பட்டது. நாம் ஏற்கெனவே பார்த்த டீப் இம்பாக்ட் படத்திலும், 2012 படத்திலும் சுனாமிகள் வருகின்றன.

இவைகள் தவிரவும் பல்வேறு வகையிலான பேரிடர்களைப் பற்றிய படங்கள் உண்டு. தீயினால் உண்டாகும் பேரிடர்கள், வைரஸ் கிருமி தாக்கி உலகெங்கும் பரவும் வியாதிகளால் உண்டாகும் பேரிடர்கள், உலகம் முழுக்க அனைவரும் நடமாடும் பிணங்களான zombieக்களாக மாறும் பேரிடர் பற்றிய படங்கள் போன்ற தலைப்புகளில் பேரிடர் படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட பேரிடர் படங்களில் பெரும்பாலும் பல படங்கள் வெறும் ஆக்‌ஷன் படங்களாகவே இருக்கும். ஆனால் அதையும் மீறி, உணர்வுகளால் எழுதப்பட்டு, படம் பார்ப்பவர்கள் மனதில் நீங்காத வடுவை உண்டாக்கும் சில படங்களும் உள்ளன. அவைகளில் சில படங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

கலிஃபோர்னியாவில் ஹின்க்லி நகரத்தில் பிறக்கும் குழந்தைகள், பல்வேறு குறைபாடுகளோடு பிறந்தனர். பிளந்த உதடுகள், ஒரு காது இல்லாமல் பிறத்தல், மனநிலையில் கோளாறோடு பிறத்தல் போன்ற பல குறைபாடுகள் நிலவின. அங்கே உள்ள மக்களுக்கும் ட்யூமர்கள் உட்படப் பல வியாதிகள் இருந்தன.

அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 1993ல் இதைப்பற்றி ஆராயப்புகுந்தபோதுதான், பஸிஃபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனம், அந்தப் பிராந்தியத்தின் நிலத்தடி நீரையே கலப்படமாக்கியிருப்பது புரிந்தது. க்ரோமியத்தின் தீவிரமான கலவை நிலத்தடி நீரில் கலப்பதால் உண்டாகும் இத்தகைய கொடூரமான நோய்களைக் கண்டறிந்த அந்தப் பெண்மணி, அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்து, 333 மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு பெற்றுத் தந்தார். அந்தப் பெண்மணி, எரின் ப்ரோகோவிச். அந்தப் பெயரிலேயே ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த படம் 2000ல் வெளியாகிப் பெருவெற்றி அடைந்தது.

இந்தப் படத்தைப் பேரிடர் படங்களில் சேர்ப்பதன் காரணம், கவனியாமல் விட்டிருந்தால் அந்தப் பிராந்தியத்தையே இந்தக் க்ரோமியம் அழித்திருக்கும் என்பதால்தான். இந்தப் பிரச்னையைப் பற்றிய தத்ரூபமான சித்தரிப்பு அப்படத்தில் இருந்தது.

எரின் ப்ரோகோவிச் படத்தை இயக்கிய ஸ்டீவன் சாடர்பெர்க், 2011ல் எடுத்த படம்தான் கண்டாஜியன் (Contagion). உலகம் முழுக்கப் பரவும் ஒருவித வைரஸால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைப் பற்றிய படம் இது. இந்த வைரஸ் எப்படி உருவானது என்றால், புல்டோஸர் ஒன்றால் இடிக்கப்பட்டு வேரறுந்து விழும் பனைமரம் ஒன்றில் இருக்கும் ஒரு வௌவால், ஒரு வாழைமரத்தில் குடியேறி, ஒரு வாழைப்பழத்தைக் கடித்து,

பன்றிகள் நிரம்பிய பட்டி ஒன்றில் போட்டுவிடும். அதை ஒரு பன்றி உண்ணும். இங்கிருந்து பன்றிகள் ஹோட்டல்களில் உணவுக்காக எடுத்துச்செல்லப்படும். அப்போது ஒரு செஃப், இந்தப் பன்றியை உணவாக்குகையில் தனது கைகளை உடையில் தேய்த்துக்கொண்டு, அதே கைகளால் படத்தின் ஆரம்பத்தில் வைரஸ் பரவக் காரணமான பெண்ணுடன் கைகுலுக்குவார். இதுதான் அந்த வைரஸின் துவக்கம். ஆந்த்ராக்ஸ், சிக்கன்குனியா போன்றவைகளால் நாம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியே இப்படிப்பட்ட படங்கள். இப்போதும்கூட இத்தகைய பிரச்னைகள் எப்போதுவேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில்தானே நாம் இருக்கிறோம்? இந்தப் படத்திலும் இத்தகைய பிரச்னைகள் விரிவாகக் காட்டப்படுகின்றன.

இந்த வைரஸால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உலகெங்கும் பிரச்னைகள் நிகழ்ந்து, இறுதியில் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்குள் மில்லியன் கணக்கில் உயிர்கள் பலியாகிவிடுகின்றன.

மூன்றாவதாக நாம் பார்க்கப்போகும் படம் மிகவும் முக்கியமானது. உலகம் எங்கும் உள்ள மனித இனம் உயிர்வாழ்வதே, தனது சந்ததியினருக்காகத்தானே? அந்தச் சந்ததியே இல்லை என்று ஆகிவிட்டால்? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் (2027), யாருக்குமே குழந்தைகளே பிறக்கமுடியாத பிரச்னை உலகெங்கும் பரவிவிடுகிறது.

கிட்டத்தட்ட 18 வருடங்களாக இந்தப் பிரச்னை நிலவுகிறது. எத்தகைய மருந்தாலும் இது குணமாவதில்லை. இதனால் பல அரசுகள் கவிழ்கின்றன. உலகமே மாறிப்போகிறது. மனித இனம் மெதுவாகக் குறைந்துகொண்டே வருகிறது. இத்தகைய சூழலில், மிகுந்த ஆச்சரியமான நிகழ்வாக, ஒரே ஒரு பெண் கருவுறுகிறாள். அவளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு கதாநாயகனுக்கு வழங்கப்படுகிறது. அவனைச் சுற்றிலும் புரட்சிப்படைகள், லண்டன் ராணுவம் ஆகியவை எந்நேரமும் சண்டையிடும் சூழல். இத்தகைய பரபரப்பான பின்னணியில் நடைபெறும் கதை இது. இதன் பல காட்சிகள் மிகுந்த பாராட்டுப் பெற்றவை. குறிப்பாக, நாயகனும் அவனுடன் இருக்கும் கீ என்ற பெண்னும், அவளது குழந்தையோடு வருகையில், திடீரென இவர்களைச் சுற்றியிருக்கும் சண்டை நிறுத்தப்பட்டு, அனைவரும் அதிசயத்துக்கு உள்ளாகி,  பிரார்த்தனைகள் ஆரம்பிக்கப்படும் காட்சி. ஏனெனில், 18 வருடங்களாக யாருமே ஒரு குழந்தையைப் பார்த்ததில்லை.

எனவே இது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் காட்சியாக இருக்கிறது. பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸோ க்யூவெரான் இயக்கிய படம் இது. வசூலில் வெற்றியடையாவிட்டாலும், உணர்வுரீதியான காட்சிகளுக்காக உலகெங்கும் பாராட்டுப்பெற்ற படம்.

இயற்கைப் பேரிடர்களைப் பற்றிய திரைப்படங்களுக்கு இக்கட்டுரையில் உள்ள படங்கள் ஒரு சிறிய உதாரணம். எல்லாப் படங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தால் இக்கட்டுரை மிகவும் நீளமாகிவிடும்.

அது நோக்கம் அல்ல என்பதாலும், இப்படங்களும் வாயிலாகப் பேசப்படும் பேரிடர்களும் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் கிட்டத்தட்ட நிஜவாழ்க்கையிலிருந்தே எடுக்கப்பட்டவை என்பதால் மனிதகுலம் இப்படங்களிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் மிக அதிகம் என்பதாலும், இப்படங்கள் முக்கியமானவைகள் ஆகின்றன. சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த பெருமழையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அப்போது உருவான மனிதநேயமிக்க மக்களும் அவர்களுக்குள்ளிருந்து வந்தவர்களே.

Disaster Movies

இதுபோன்ற பாடங்கள்தான் இப்படங்களால் சொல்லப்படுகின்றன. மேலும், மனிதகுலம் போன்ற பொறுப்பற்ற இடம் இதுவரை பூஇயில் வந்ததில்லை. மனிதன் செய்யும் அட்டூழியங்களால் இயற்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதையும், அந்த இயற்கை பதிலடி கொடுக்கையில் மனிதன் எப்படி அழிக்கப்படுகிறான் என்பதையும் விரிவாகப் பதிவுசெய்யும் படங்களாகவும் இவை இருக்கின்றன. அந்தவகையில், இப்படங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம்.

Thanks to karunthel Rajesh

Leave a Comment Cancel Reply